Wednesday, September 11, 2019

ஓணம் பண்டிகை ( மூன்றடி மண் )

ஓணம் பண்டிகை

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி மன்னர். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமனாக உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார்.



ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?' என்றார்.

‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்' என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.



கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கமாறு அருள் பாலித்தார் மகாவிஷ்ணு .  தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள்

மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும்.



கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத் திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரே வகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.




நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஓணம் பண்டிகையின்  முதல் நாள் அத்தம் ,

இரண்டாம் நாள் சித்திரா,

மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.

நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர்.

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) ,

ஏழாம் நாள் மூலம்.

எட்டாம் நாள் பூராடம்.

ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும்.

பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

 "ஓண சாத்யா"



 "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.


பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.

புலிக்களி





"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.



ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.

ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.



ஓணம் பண்டிகையை முன்னிட்டுகேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள்,பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.



தமிழ் இலக்கியத்தில் ஓணம் பண்டிகை

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும்.   சங்ககால ஏடுகளில்  விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் 
வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. 
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"
 - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் பரம்பரையாகத் திருமாளுக்கு தொண்டு செய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போகப் பல்லாண்டு வாழ்த்துவமே...

“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே”
 - பெரியாழ்வார் திருமொழி 
தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்‌தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்.

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”
 - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2


இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Saturday, September 7, 2019

அறுபதாம் கல்யாணம் என்கிற மணி விழா ~ சாந்தி சமஸ்காரங்கள்

அறுபதாம் கல்யாணம் என்கிற மணி விழா

சாந்தி சமஸ்காரங்கள் ( பரிகாரங்கள் )



இந்து மத சமஸ்காரங்களில் மனிதன் செய்ய வேண்டியதாக
60 வகை சடங்குகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல சடங்குகள்
அவனது குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும்
அவனது தந்தையால் செய்யப்பட்டு விடுகின்றன.

மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற
இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ காரிய பலன்கள்
ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும்
அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக
அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் ,
78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு
ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை
செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

ஓரு ஆண்டு முடிவில் ஜன்ம நக்ஷத்ர நாளில் சாந்தி அப்த பூர்த்தி

55 வயது ஆரம்பத்தில் பீம சாந்தி

உக்ர ரத சாந்தி

மனிதனின் 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி "உக்ர ரத சாந்தி" என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்கிறார்கள்.

அறுபது வயதில் திருமணம் போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.



61 வயது ஆரம்பத்தில் சஷ்டியப்த பூர்த்தி

"ஷஷ்டியப்த பூர்த்தி" எனும் இந்த மணி விழாவில்  5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 எனும் வரிசையில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. முக்கியமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகர்கள், சப்தசிரஞ்சீவிகள், ஆயுள் தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம், கணபதி, நவக்கிரகம், அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜை செய்வது சிறப்பானதாகும்.

இதில் சிவ தீட்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவபூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும், பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1-ம், ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தாபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

இந்த வழிபாட்டிற்குப் பின்பு தைல தானம், ஆஜ்யதானம், உதகபாத்ர தானம், வஸ்திர தானம், நவதானிய தானம், பூ தானம், கோ தானம், தில தானம், தீப தானம், ருத்ராட்சம் அல்லது மணி தானம், எனும் தச தானம் செய்து உமா மகேஷ்வர பூஜை எனும் வயோதிகத் தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.

இந்த மணிவிழா நிகழ்வுகள் தமிழ்நாட்டில் திருக்கடையூர் எனும் ஊரிலுள்ள சிவத்தலத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள ஏதாவது ஒரு கோயிலில் செய்து கொள்கின்றனர்.



70 வயது ஆர்ம்பத்தில் பீமரத சாந்தி

72 வயது ஆர்ம்Uத்தில் ரத சாந்தி

77 வயது 7 மாதம் 7ம் நாள் ஆர்ம்Uத்தில் விஜயரத சாந்தி

மனிதனின் 78 ஆம் ஆண்டு துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு "விஜயரத சாந்தி" சடங்கு செய்யப்படுகிறது.

கொள்ளுபேரன் பிறந்த நாளில் செய்யப்படுவது கனகாபிஷேகம்

மனிதனின் 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று "சகஸ்ர சந்திர தர்சன சாந்தி" செய்யப்படுகிறது.

85 வயது முதல் 90 வயது வரை . ம்ருத்யுஞ்ய சாந்தி

மனிதனின் வாழ்க்கையில் 100 ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் போது செய்யப்படும் சாந்தி "சதாபிஷேக கனகாபிஷேகம்" என்று அழைக்கப்படுகிறது. இதுவே "அஷ்டோத்தர சதருத்ர கலசாபிஷேகம்" என்றும் சொல்லப்படுகிறது.

120 வயது சாந்தி.பௌஷ்டிகம்.

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் சாந்தி குசுமாசுரம் மற்றும் சாந்திரத்னாகரத்தில் உள்ளது.

ஜனனி ஜன்ம சௌக்யானாம் !

                  ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்
                  பதவி பூர்வ  புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா !




ஜாதகத்தில் லக்கினாதிபதி வலுத்திருந்தால் ஒருவரது ஜென்மம் சகல பாக்கியத்துடன் சீரும் சிறப்புமாக அமையும். ஈதலும் இசைப்பட வாழ்தலும் என்பதற்கு இணங்க வாழ்க்கை அமையும். தோன்றின் புகழோடு தோன்றுக என்பது வள்ளுவர் வான்மறை. ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் சூரியன் சந்திரன் மூன்றும் வலுத்திருந்தால் மேற்கண்ட நிலையில் வாழ்க்கை அமையும். உடல் உள்ளம் உயிர் மூன்றும் சிறப்புடன் செயலாற்றும்.

சுகாதிபதி அதிபதி வலுத்திருந்தால் தன்னுடைய குலம் சகல சம்பத்துடன் தழைத்து ஓங்கியிருக்கும். பேரன் கொள்ளுப்பேரன் வரை தன் வாழ்நாள் சகல வசதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். மனை வாகன தாயாதி வகைகள் அனைத்தும் சிறப்பாக அமையும்.

பூர்வபுண்ணியாதிபதி வலுத்திருந்தால் இம்மையில் அரசனுக்கு நிகராகவும் மறுமையில் தேவேந்திரப்பதவி, - சிவலோகப்பதவி - விஷ்ணுலோகப்பதவி ` சாலோக சாமிப சாரூப சாயுச்சிய பதவிகளை ஒருவன் பெறுவான்.
அவரவர் புண்ணியமே மக்கட் செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்பதற்கிணங்க தொட்டதெல்லாம் பொன்னாகும். எண்ணங்கள் ஈடேற மனமகிழ்வுடன் வாழ்வர்.

Thursday, September 5, 2019

அபரான்னம்.

பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.




பகல் பொழுதை  ஐந்து பாகமாக பிரித்து அதில்  நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும்  அபரான்னமே பிதிர்களுக்கு உகந்த காலமாகும். சிராத்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால் அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைபிடிக்க வேண்டும்.

இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்  நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின் இன்னும் விசேஷமாகும்  என்கிறது கதிவிலோசனம் எனும் பழமையான சாஸ்திர நூல்.

குதப காலம் என்பது பகல் பொழுதை பதினைந்து பாகமாக பிரித்து அதில் எட்டாவது பாகமே குதப்ப காலமாகும் . பகல் பொழுது  தோராயமாக 30 நாழிகை அல்லது 12 மணி நேரம் எனில் 12  / 15 = 48 நிமிடம் அல்லது இரண்டு நாழிகை அளவு ஆகும்.

காலை சூரிய உதயத்திலிருந்து கணக்கிட ஏழாவது பாகத்திலிருந்து குதப கால தொடக்கம்.48 x 7 = 336 நிமிடங்கள் 5 மணி 36 நிமிடங்கள் . காலை சூரிய உதயம் 6 மணி எனில் 6 + 5.36
= 11.36 மணி முதல் 12.24 மதியம் வரை குதப காலமாகும். சிராத்ததிற்கு இந்த குதப காலம் ஆன 11 மணி 36 நிமிடத்திலிருந்து 12 மணி 24 நிமிடம் வரை  கருப்பு எள்ளும் பெண் வயிற்று பிள்ளையும் சிறந்தது.
எவன் ஜோதிட சாஸ்திர இரகசியத்தை அறிவானோ அவன் அறம் பொருள் இன்பம் வீடு இவற்றையும் நற்கீர்த்தியையும் அடைவான்.
 ~ பாஸ்கர சித்தாந்தம்.
x
Related Posts Plugin for WordPress, Blogger...