Saturday, December 19, 2015

தீர்க்க ஆயுள்



ஆயுள் தீர்க்கம் !

இலக்கினதோன் அஷ்டமத்தோ னுடனேகூடி
இசைந்ததசமாதிபதி மூவர் சேர்ந்து 
பலமான கேந்திரதிரி கோணமுற்றால்
பாரிலவர்  தீர்க்காயுளாய் வாழ்வார்கள் 
நலமுடனே லக்கினேசன் அஷ்டமத்தோன்
நாடியே சரத்திலிருந்தால் தீர்காயுளாகும்
கலக்கமுடன் ஸ்திரஉபய ராசியாகில்
கழருவாய் மத்திப ஆயுளென்றே !                                   ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


இலக்கினாதிபதி, அஷ்டமஸ்தானாதிபதி, தசமஸ்தானதிபதி சேர்ந்து கேந்திர திரிகோணத்திலிருந்தால் ஜாதகன் தீர்க்காயுள் உள்ளவனாவான். அது போன்றே இலக்கினாதிபதியும் அஷ்டமாதிபதியும் சேர்ந்து சர ராசியில் நின்றால் தீர்க்காயுளுடன் இருப்பான். ஸ்திர மற்றும் உபயத்திலிருந்தால் மத்திம ஆயுளாகும்.

Thursday, December 17, 2015

நேத்திரம்



நேத்திர நோய் !

ஜன்மலக்கினம் மேஷமாய் ரவியிருந்தால்
ஜனித்தவன் நேத்திரரோகி யாயிருப்பான்
அன்புடனே கடகலக்கினம் ரவியிருந்தால்
ஆகுமப்பாநேத் திரபங்க மென்றேசொல்லு
இன்புடனேதுலா சிங்கந்தனிலே சூரியன்
இருந்தாலும் இரவில்கண் தெரிதப்பா
பன்னிரண்டு இரண்டில் ரவிபாபர் சேர்ந்தால்
பலநாளும் கண்நோயால் கலங்குவாறே!                  ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


ஜன்ம லக்னம் மேஷமாயிருந்து சூரியனிருந்தால் ஜாதகன் கண் நோய் உள்ளவராக இருப்பார்.கடக லக்கினமாகி சூரியனிருந்தால் நேத்திர பங்கமாகும். துலா லக்கினம் சிம்மலக்னமாய் இருந்து சூரியனிருந்தால் இரவில் கண் பார்வை தெரியாது . இரண்டு பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சதா காலமும் கண் நோய் இருக்கும்.

வாக்கு ஸ்தானமும் வித்தையும்




வாக்கு ஸ்தானமும் வித்தையும் !

இலக்கினத்திரண்டில் குருவிருந்தால் வேத சாஸ்திரங்கற்பான்.
                 இதமுடனே புதனிருந்தால் தமிழில் வல்லோனாம் 
தெலுங்கு கன்னடங்கற்பான் சனிசெவ்வாய் நிற்கில் 
                 தெளிவாக ராகுகேது இரண்டோனும் சேர்ந்தால் 
பலவிதமாயன்னிய பாஷை முதலாயுள்ள 
                 பலபாஷை நீஷபாஷை யெல்லாம் கற்று 
நலமுடனே சமர்த்தாய் விளங்கியிந்த 
                 ஞாலமதில் கீர்த்தியுடனிருப்பான் தானே !        ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


வாக்கு ஸ்தானத்தில் 

குரு இருக்க வேத சாஸ்திரங்களை கற்றுணர்வார்கள்.
புதன் இருக்க தமிழில் பாண்டித்தியம் பெற்று கீர்த்தி பெறுவார்கள்
சனியும் செவ்வாயும் நிற்க தெலுங்கு கன்னட பாஷை கற்றுணர்வார்கள்.
வாக்கு ஸ்தானாதிபதியும் ராகு கேது சேர்ந்திருந்தால் அந்நிய பாஷை நிஷா பாஷை முதலான பலவிதமான பாஷைகளையும் சாதகர் கற்றுணர்ந்து சிறப்பு பெறுவார்கள்.

Wednesday, December 16, 2015

ஜாதகன் விரும்பும் சுவைகள் !



ஜாதகன் விரும்பும் சுவைகள் !

இலக்கனத்தோன் குருவானால் தயிரிச் சிப்பான் !
              இசைந்த புதனானாலே புளிப் பிச்சிப்பான் !
நலமுடன் சுக்ரனானால் சர்க்கரை தேனிஷ்டம் !
         நவிலுவாய் சனிக்குக் கீரை விருப்பமாகும் !
நலத்தோனோடே ராகுகேது குளிகன் சேர்ந்தால்
               சத்திபூஜை செய்து மாங்கிஷம் புசிப்பார் !
நலமாய் வியாழனானால் ஊஷ்ண பஷண மென்றும்
      நவில்புதன் சந்திரன் குளிர்ந்த சோறுண்பாரே ! ~ ஜம்புமஹரிஷி வாக்கியம்.


இலக்கனாதிபதி குருவானால் தயிர் விருப்பம்.
புதனானால் புளிப்பு சுவையும்,
சுக்ரனானால் இனிப்பு சுவையும்,
சனியானால் கீரை வகைகளும்,
ராகுகேதுக்கள் லக்னத்தில் இருக்க உடன் குளிகன் சேர்ந்தால்
சத்திபூஜை செய்து மது மாமிச வகைகளை புசிப்பார்.

குரு லக்னாதிபதியானால் உடலுக்கு உஷ்ணம் தரும் ஆகாரங்களை உண்பார்.
புதனும் சந்திரனும் ஆனால் குளிர்ச்சி தரும் பதார்த்தங்களை உண்பர்.
சூரியனும் செவ்வாயும் லக்னாதியானால் அன்ன பதார்த்தங்களை சுடச்சுட உண்பர்.

Sunday, December 13, 2015

ஜோதிட பழமொழிகள்.


ஜோதிட பழமொழிகள்


ஜோதிட (கிழமை) பழமொழிகள்.

ஞாயிறு (பயணம்) நாய் பட்ட பாடு.
திங்கள் பயணம் திரும்பாப் பயணம்.
திரும்பிப் பார்த்தல் திங்கட்கிழமை.
செவ்வாயோ வெறும்வாயோ !
செவ்வாயோ,வருவாயோ !
கேட்டை,மூட்டை , செவ்வாய் கிழமை.
பொன் அகப்பட்டாலும் புதன் அகப்படாது.
புற்றில் இருக்கும் பாம்பும் புதனில் புறப்படாது.
சனிப்பிணம் தனிப் போகாது.
ஸ்திர வார காரியம் (சனி வாரம் ) ஸ்திரமானது.
·  பத்தில் குரு பதவிக்கு இடர் !
·  பத்தில் பாம்பு இருந்தால் பணம் பறந்து வரும் !
·  மறைந்த புதன் நிறைந்த கல்வி !
·  பத்தில் குரு வந்தால் பதவி பறி போகும் !
·  ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு
·  எட்டில் சனி நீண்ட ஆயுள்



·  குரு பார்க்க கோடி நன்மை !
·  குரு நின்ற இடம் பாழ்
·  பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது !
·  விதி போகும் வழியே மதி போகும். !
·  குரு கொடுப்பின் சனி தடுப்பார்; சனி கொடுப்பின் எவர் தடுப்பார்?

·  சனி பார்த்த இடம் பாழ் !
·  சனி பிடித்தவனுக்கு சந்தையிலும் கந்தை கிடைக்காது !
·  சனி நீராடு !
·  சனிபகவானைப் போன்று கெடுப்பாரும் இல்லை; கொடுப்பாரும் இல்லை
·  அகப்பட்டவனுக்கு அஷ்டத்தில் சனி
·  சனி பார்க்கும் இடம் பாழ்.

·  இரவில் செய்தாலும் அரவில் செய்யாதே !
·  நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை !
·  வைத்தியன் கையை பிடிப்பான். ஜோதிடன் காலை பிடிப்பான் !
·  ராசி இருக்கு தாசில் பண்ண அம்சம் இருக்கு கழுதை மேய்க்க !


·  கன்னியில் செவ்வாய் கடலும் வற்றும் !
·  கும்பத்து வெள்ளி குடம் கொண்டு சாய்க்கும் !
·  மேஷ ராகு மேன்மையை கொடுக்கும் !
·  துலா கேது தொல்லை தீர்க்கும் !

·  சித்திரையில் பிறந்தவன் தெருவில் திரிவான் !
·  சித்திரை மாதம் செல்வன் பிறந்தால் சீரும் சிறப்பும் கெடும் !
·  சித்திரை அப்பன் தெருவிலே !

· பரணி தரணி ஆளும் !
·  மகத்துப் பெண் பூரத்துப் புருஷன் !
· மகத்துப் பெண் ஜெகத்தினை ஆளுவாள் !
·  சுவாதி சுக்ரன் ஓயா மழை !
·  அவிட்டம் , தவிட்டுப் பானையிலே பணம் !
· கேட்டை கோட்டை கட்டி ஆளும் !
· ஆனி மூலம் அரசாளும் – கன்னி மூலம் நிர்மூலம் !
· பூராடம் போராடும் !
· பூராடம் நூலாடாது !
· உத்திரத்தில் ஓர் பிள்ளையும் ஊர் கோடியில் காணி நிலமும்   போதும் !

Saturday, December 12, 2015

திதிகளின் தெய்வங்கள் !



திதிகளின் தெய்வங்கள் !

சுக்லபட்சம்

1. பிரதமை –  குபேரன் மற்றும் பிரம்மா
2. துவதியை – பிரம்மா 
3. திரிதியை – சிவன் மற்றும் கெளரி மாதா
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – திரிபுர சுந்தரி
6. ஷஷ்டி – செவ்வாய்
7. ஸப்தமி – ரிஷி மற்றும் இந்திரன் 
8. அஷ்டமி –  காலபைரவர்
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – வீரபத்ரர் மற்றும் தர்மராஜன் 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – மகா விஷ்ணு 
13. திரயோதசி – மன்மதன் 
14. சதுர்த்தசி –  காளி
15. பவுர்ணமி – லலிதாம்பிகை 


கிருஷ்ணபட்சம்

1. பிரதமை –  துர்க்கை
2. துவதியை – வாயு 
3. திரிதியை – akni
4. சதுர்த்தி –  எமன் மற்றும் விநாயகர் 
5. பஞ்சமி – நாகதேவதை 
6. ஷஷ்டி – முருகன் 
7. ஸப்தமி – சூரியன் 
8. அஷ்டமி –  மஹாருத்ரன் மற்றும் துர்க்கை
9. நவமி –  சரஸ்வதி 
10. தசமி – எமன் மற்றும் துர்கை 
11. ஏகாதசி – மஹாருத்ரன் மற்றும் மகாவிஷ்ணு
12. துவாதசி – சுக்ரன்
13. திரயோதசி – நந்தி
14. சதுர்த்தசி –  ருத்ரர் 
15..அமாவாசை - பித்ருக்கள் மற்றும் காளி 

திதி நித்யா தேவதைகள்.



திதி நித்யா தேவதைகள்.

நித்யா என்றால் என்றும் இருப்பவள் என்று அர்த்தம். இவர்கள் மொத்தம் பதினைந்து பேர். தேவியின் அம்ருத கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து, ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யா தேவிகளாக த்ரிகோணத்தைச் சுற்றி, பக்கத்துக்கு ஐந்து நித்யா தேவிகள் வீற்றிருந்து அருள்கின்றனர்.


திதி சூனியத்தை நீக்கி வெற்றி தரும் திதி நித்யா தேவதைகள்.

ஸ்ரீசக்ர நாயகியான லலிதா பரமேஸ்வரியை வழிபடும் முறையே ஸ்ரீவித்யை. அந்த ஸ்ரீவித்யையில் அம்பிகையை ஆராதிக்கும்போது, அவள் பிந்து மத்ய வாசினி என்பதற்கிணங்க, ஸ்ரீசக்ரத்தின் நடுவில் காமேஸ்வரனோடு இணைந்து காமேஸ்வரியாக அருள்பாலிக்கிறாள். பிந்துவைச் சுற்றி ஒரு முக்கோணம் இருக்கிறது. அந்த முக்கோணத்தில் வீற்றிருப்பவர்களே திதி நித்யா தேவிகள்.




அவரவர்கள் பிறந்த திதி, அதற்குரிய திதி நித்யா தேவியை அந்த திதி நாளில் ஸ்ரீ லலிதம்பிகையுடன் ஸ்ரீசக்ரம் வைத்து (ஒரு வருடம்) மூல மந்திரம் சொல்லி வணங்கி,திதி சூனியத்தை நீக்கி வெற்றி தருமாறு சங்கல்பம் செய்து வர, திதி சூனியம் நீக்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

1. பிரதமை – ஸ்ரீ காமேஸ்வரி நித்யா
2. துவதியை –பகமாலினி நித்யா 
3. திரிதியை – நித்யக்லின்னை நித்யா
4. சதுர்த்தி – பேருண்டா நித்யா
5. பஞ்சமி – வந்நிவாசினி நித்யா
6. ஷஷ்டி – மஹாவஜ்ரேஸ்வரி நித்யா
7. ஸப்தமி – சிவதூதி நித்யா
8. அஷ்டமி – த்வரிதா நித்யா
9. நவமி – குலசுந்தரி நித்யா
10. தசமி – நித்ய நித்யா
11. ஏகாதசி – நீலபதாகா நித்யா
12. துவாதசி – விஜயா நித்யா
13. திரயோதசி – ஸர்வமங்களா நித்யா
14. சதுர்த்தசி – ஜ்வாலாமாலினி நித்யா
15. பவுர்ணமி – சித்ராதேவி நித்யா



அன்னையின் காலவடிவே இந்த நித்யா தேவிகள். ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான 15 நாட்களுக்கும், சந்திரகலை வளர்கிறது.ஒவ்வொரு சந்திர கலைக்கும் திதிகளுக்கும் அதிஷ்டான தேவதைகளாக பதினைந்து நித்யா தேவிகள் விளங்குகிறார்கள். காமேச்வரி முதல் சித்ரா வரையிலான பதினைந்து நித்யா தேவிகளும் அன்னையைச் சுற்றியே எப்போதும் காணப்படுபவர்கள். இவர்களே ப்ரதமை முதல் பவுர்ணமி வரையிலான சந்திரகலையின் வடிவம். மகா நித்யாவாக அம்பிகையே வீற்றிருக்கிறாள்.

திதிகளின் வகைகள் !



திதிகளின் வகைகள்
!

நந்த திதிகள் = பிரதமை, சஷ்டி, ஏகாதசி 
பத்ர திதிகள் = திவிதியை, சப்தமி, துவாதசி 
ஜெய திதிகள் = திருதியை, அஷ்டமி, திரியோதசி
ரிக்த திதிகள் = சதுர்த்தி, நவமி, சதுர்த்தசி
பூர்ண திதிகள் = பஞ்சமி, தசமி, பௌர்ணமி 

நந்த திதிகள் = மகிழ்ச்சியும், களிப்பும் அளிப்பவை !
பத்ர திதிகள் = அனைத்து செயல்களும் தொடங்க ஏற்றவை !
ஜெய திதிகள் = எதிரிகளை வெல்ல !
ரிக்த திதிகள் = தடைகளையும் துக்கத்தையும் அளிப்பவை !
பூர்ண திதிகள் = அனைத்து விசயங்களையும் பூர்த்தி செய்ய ஏற்றவை !

பக்ஷச்சித்திரை = வளர்பிறை மற்றும் தேய்பிறைகளில் வரும் சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, துவாதசி, சதுர்த்தசி ஆகிய ஐந்தும்  பக்ஷச்சித்திரை ஆகும்.

தக்த யோகத் திதிகள் !
துவாதசி திதியும் ஞாயிற்று கிழமையும் 
ஏகாதசி திதியும் திங்கட் கிழமையும் 
பஞ்சமி திதியும் செவ்வாய் கிழமையும் 
திவிதியை  திதியும் புதன் கிழமையும் 
சஷ்டி திதியும் வியாழக் கிழமையும்
அஷ்டமி திதியும் வெள்ளி கிழமையும்  
நவமி திதியும் சனிக் கிழமையும்  வந்தால் தக்த யோக திதிகளாகும்.

திதிகள்



நமது பஞ்சாங்க கணிதத்தில் முக்கிய பங்கு சந்திர சித்தாந்த கணிதத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம் கரணம் ஆகிய பஞ்ச அங்கத்தில் வாரத்தை தவிர்த்து மற்ற நான்கும் சந்திரனின் நிலையை கொண்டே அறியப்படுகிறது. பஞ்ச அங்கங்களுள் முக்கியமான ஒன்று திதி என்பதாகும். 

விண்வெளியில் சந்திரன் சென்று கொண்டிருக்கும்  நிலைக்கும் சூரியன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவே திதிகளாக கணக்கிடப்படுகின்றன. திகைதி என்ற சொல்லின் திரிபே திகதி என்றும் திதி என்றும் பின்னர்  தேதி என்றும் மருவியது.

இந்த திதிகள் மொத்தம் முப்பது ஆகும். இவை வளர்பிறை திதிகள் பதினைந்தாகவும் தேய்பிறை திதிகள் பதினைந்தாகவும் ஆக முப்பது திதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பது நாட்கள் கொண்ட மாதம் இரண்டு பட்சங்களாக பிரிக்கப்படுகிறது. அவை சுக்லபட்சம் என்னும் வளர்பிறை திதிகளும்,  அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறை திதிகளும் கொண்டவை.

360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு திதியின் அளவை கணக்கிட வேண்டுமென்றால் 360° பாகையை 30° ஆல் வகுக்க 12° பாகை வரும்.இதுவே
திதியின் அளவாகும்.

சுக்ல என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு வெண்மை என்று பொருள். சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்த்திருக்கும் 0 பாகையான அமாவாசையிலிருந்து வளரும் திதிகளுக்கு சுக்ல பட்ச திதிகள் என்று பெயர். வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரையுள்ள பதினைந்து திதிகளும் சுக்லபட்ச திதிகளாகும்.


கிருஷ்ண  என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு கருமை என்று பொருள். கண்ணின் கருவிழிக்கு (கிருஷ்ண படலம் என்றும் கரும் கூந்தலுக்கு கிருஷ்ணவேணி என்றும்  பெயர்.) சூரியனுக்கு எதிரே பாகையில் சந்திரன் இருப்பது பௌர்ணமி ஆகும். தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள பதினைந்து திதிகளும் கிருஷ்ணபட்ச திதிகளாகும்.

வளர்பிறை காலம் ( சுக்லபட்சம் )

0  முதல் 12 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
12 முதல் 24 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
24 முதல் 36 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
36 முதல் 48 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
48 முதல் 60 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
60 முதல் 72 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
72 முதல் 84 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
84 முதல் 96 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
96 முதல் 108 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
108 முதல் 120 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
120 முதல் 132 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
132 முதல் 144 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
144 முதல் 156 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
156 முதல் 168 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
168 முதல் 180 பாகை வரை பௌர்ணமி  ( பதினைந்தாம் நாள் )
சூரியனுக்கு நேர் எதிர் பாகையில் நிலவு முழுமையாக பிரகாசிக்கும் நாள்.
அதன் பிறகு தேய்மானம் ஒவ்வொரு 12 பாகைக்கும் தொடர்ந்து 15-ந்தாம் நாள் 
ஏக பாகையில் சூரியனும் சந்திரனும் இணைவது அமாவாசையாகும்.

தேய்பிறை காலம் ( கிருஷ்ணபட்சம்,அமரபட்சம் )


180  முதல் 192 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).

192 முதல் 202 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
202 முதல் 214 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
214 முதல் 226 பாகை வரை சதுர்த்தி  திதி ( நான்காம் நாள் )
226 முதல் 238 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
238 முதல் 250 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
250 முதல் 262 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
262 முதல் 274 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
274 முதல் 286 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம்  நாள் )
286 முதல் 298 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
298 முதல் 310 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
310 முதல் 322 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
322 முதல் 336 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
336 முதல் 348 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
348 முதல் 360 பாகை வரை அமாவாசை ( பதினைந்தாம் நாள் )


Related Posts Plugin for WordPress, Blogger...