நமது பஞ்சாங்க கணிதத்தில் முக்கிய பங்கு சந்திர சித்தாந்த கணிதத்தை கொண்டே கணிக்கப்படுகிறது. வாரம், திதி, நட்சத்திரம், யோகம் கரணம் ஆகிய பஞ்ச அங்கத்தில் வாரத்தை தவிர்த்து மற்ற நான்கும் சந்திரனின் நிலையை கொண்டே அறியப்படுகிறது. பஞ்ச அங்கங்களுள் முக்கியமான ஒன்று திதி என்பதாகும்.
விண்வெளியில் சந்திரன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் சூரியன் சென்று கொண்டிருக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவே திதிகளாக கணக்கிடப்படுகின்றன. திகைதி என்ற சொல்லின் திரிபே திகதி என்றும் திதி என்றும் பின்னர் தேதி என்றும் மருவியது.
இந்த திதிகள் மொத்தம் முப்பது ஆகும். இவை வளர்பிறை திதிகள் பதினைந்தாகவும் தேய்பிறை திதிகள் பதினைந்தாகவும் ஆக முப்பது திதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் முப்பது நாட்கள் கொண்ட மாதம் இரண்டு பட்சங்களாக பிரிக்கப்படுகிறது. அவை சுக்லபட்சம் என்னும் வளர்பிறை திதிகளும், அமரபட்சம் அல்லது கிருஷ்ணபட்சம் என்னும் தேய்பிறை திதிகளும் கொண்டவை.
360 பாகைகள் கொண்ட வான மண்டலத்தில் ஒரு திதியின் அளவை கணக்கிட வேண்டுமென்றால் 360° பாகையை 30° ஆல் வகுக்க 12° பாகை வரும்.இதுவே
திதியின் அளவாகும்.
சுக்ல என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு வெண்மை என்று பொருள். சூரியனும் சந்திரனும் ஒன்றாக சேர்த்திருக்கும் 0 பாகையான அமாவாசையிலிருந்து வளரும் திதிகளுக்கு சுக்ல பட்ச திதிகள் என்று பெயர். வளர்பிறை பிரதமை முதல் பௌர்ணமி வரையுள்ள பதினைந்து திதிகளும் சுக்லபட்ச திதிகளாகும்.
கிருஷ்ண என்னும் சம்ஸ்கிருத சொல்லிற்கு கருமை என்று பொருள். கண்ணின் கருவிழிக்கு (கிருஷ்ண படலம் என்றும் கரும் கூந்தலுக்கு கிருஷ்ணவேணி என்றும் பெயர்.) சூரியனுக்கு எதிரே பாகையில் சந்திரன் இருப்பது பௌர்ணமி ஆகும். தேய்பிறை பிரதமை முதல் அமாவாசை வரையுள்ள பதினைந்து திதிகளும் கிருஷ்ணபட்ச திதிகளாகும்.
வளர்பிறை காலம் ( சுக்லபட்சம் )
0 முதல் 12 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
12 முதல் 24 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
24 முதல் 36 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
36 முதல் 48 பாகை வரை சதுர்த்தி திதி ( நான்காம் நாள் )
48 முதல் 60 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
60 முதல் 72 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
72 முதல் 84 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
84 முதல் 96 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
96 முதல் 108 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம் நாள் )
108 முதல் 120 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
120 முதல் 132 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
132 முதல் 144 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
144 முதல் 156 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
156 முதல் 168 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
168 முதல் 180 பாகை வரை பௌர்ணமி ( பதினைந்தாம் நாள் )
சூரியனுக்கு நேர் எதிர் பாகையில் நிலவு முழுமையாக பிரகாசிக்கும் நாள்.
அதன் பிறகு தேய்மானம் ஒவ்வொரு 12 பாகைக்கும் தொடர்ந்து 15-ந்தாம் நாள்
ஏக பாகையில் சூரியனும் சந்திரனும் இணைவது அமாவாசையாகும்.
தேய்பிறை காலம் ( கிருஷ்ணபட்சம்,அமரபட்சம் )
180 முதல் 192 பாகை வரை பிரதமை திதி ( முதல் நாள் ).
192 முதல் 202 பாகை வரை துவிதியை திதி ( இரண்டாம் நாள் )
202 முதல் 214 பாகை வரை திருதியை திதி ( மூன்றாம் நாள் )
214 முதல் 226 பாகை வரை சதுர்த்தி திதி ( நான்காம் நாள் )
226 முதல் 238 பாகை வரை பஞ்சமி திதி ( ஐந்தாம் நாள் )
238 முதல் 250 பாகை வரை சஷ்டி திதி ( ஆறாம் நாள் )
250 முதல் 262 பாகை வரை சப்தமி திதி ( ஏழாம் நாள் )
262 முதல் 274 பாகை வரை அஷ்டமி திதி ( எட்டாம் நாள் )
274 முதல் 286 பாகை வரை நவமி திதி ( ஒன்பதாம் நாள் )
286 முதல் 298 பாகை வரை தசமி திதி ( பத்தாம் நாள் )
298 முதல் 310 பாகை வரை ஏகாதசி திதி ( பதினோராம் நாள் )
310 முதல் 322 பாகை வரை துவாதசி திதி ( பன்னிரெண்டாம் நாள் )
322 முதல் 336 பாகை வரை திரியோதசி திதி ( பதிமூன்றாம் நாள் )
336 முதல் 348 பாகை வரை சதுர்த்தசி திதி ( பதிநான்காம் நாள் )
348 முதல் 360 பாகை வரை அமாவாசை ( பதினைந்தாம் நாள் )
No comments:
Post a Comment