Friday, July 3, 2020

ஜாதக அலங்காரம் பற்றிய குறிப்பு

ஜாதக அலங்காரம் !

ஸ்ரீமான் கீரனூர் நடராஜ ஐயர் தமிழில் இயற்றிய நூல்.

சுமார் 110 சுலோகங்கள் கொண்டது இது. ஸ்ரக்தரா விருத்தத்தில் அமைந்துள்ளன.இந்த புகழ் பெற்ற ஜோதிட மூல நூலைத் தந்தவர் கணேசர் அல்லது ஸ்ரீ கணபதி ஆவார்.

ஏழு அத்தியாயங்கள் கொண்ட சிறிய நூலில் ஏழாவது அத்தியாயத்தில் இவர் தம்மைப் பற்றி வெகு சுருக்கமாக நான்கே செய்யுள்களில் கூறுகிறார்.இந்த அத்தியாயத்தின் பெயர் வம்ச வருண அத்தியாயம். அதில் இவர் தன்னைப் பற்றிக் கூறுவதன் சுருக்கத்தைப் பார்ப்போம்.

புகழ் பெற்ற இந்த உலகில் குஜராத் மன்னரின் அரசவையில் கன்ஹாஜி என்ற ஜோதிடர்களுக்குள் மகேந்திரனாக விளங்கிய பிரபல மேதை இருந்தார். அவர் பாரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மூன்று புத்திரர்கள் பிறந்தனர்.

மூத்தவரான சூர்யதசா மிகவும் புத்திசாலி. சிறந்த ஜோதிடருமாவார். அவருக்கு அடுத்துப் பிறந்தவர் கோபாலர்.அனைத்துக் கலைகளிலும் சிறந்தவர், மூன்றாமவரான ராமகிருஷ்ணர் ஜோதிடர்களிலெல்லாம் சிறந்தவராக விளங்கினார்.

இதில் கோபாலருக்கு மகனாகப் பிறந்தவர் கணேசர்.இவர் சாலிவாகன சகாப்தம் 1535ல் (கி.பி, 1613) பாத்ரபத மாதத்தில் ப்ரத்னபுரத்தில் இதை இயற்றினார்.” இப்படி இவர் தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.


இந்த நூலில் உள்ள ஏழு அத்தியாயங்கள் இவை தான் 1) சம்ஜ்ஞா அத்யாயம் 2)பாவ அத்யாயம் 3) யோக அத்யாயம் 4) விஷ கன்யா அத்யாயம் 5) ஆயுர்த்தாய அத்யாயம் 6)வ்யதியய பாவ பலாத்யாயம் 7)வம்ச வருண அத்யாயம்

 சம்ஜ்ஞா அத்தியாயத்தில் லக்னத்திலிருந்து ஒவ்வொரு பாவமாக அது எதைக் குறிக்கும் என்பதை விளக்குகிறார். லக்னத்திற்கு மூர்த்தி, அங்கம் தனு உதயம் என்று பெயர்கள் உண்டு என்பதையும் இரண்டாம் இடத்திற்கு ஸ்வ, கோச, அர்த்த,குடும்ப தன என்ற பெயர்கள் உண்டு என்பதையும் சொல்லி அதன் அர்த்தமான செல்வம்,புதையல் போன்ற சொற்களால் அதை விளக்குகிறார்.

அடுத்த அத்தியாயத்தில் ஒவ்வொரு ராசியிலும் நிற்கும் கிரகத்திற்கான பலன்களைத் தெளிவாகச் சொல்கிறார்.இப்படி ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரி வரியாக ஒவ்வொரு விஷயமாக இவர் விளக்கிச் சொல்வது கற்பவரை பரவசத்தில் ஆழ்த்தும். ஜோதிடத்தை படிப்படியாக எளிமையாகக் கற்க ஏற்ற நூல் இது.

வடை மாலை




ஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை சாத்தப்படுகிறது ?

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுவதற்கு ஒரு புராணகதை சொல்லப்படுவது உண்டு.ஒரு சமயம் சூரிய உதயத்தின்போது சிகப்பாக இருக்கும் சூரியன் ஒரு பழமாக சின்ன குழந்தையான அனுமனுக்கு தெரிந்ததால்,அதை சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். 

பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை. அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.

 ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார். 

இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார். 

இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.

ராகு தோஷத்தால் பாதிக்கப்பட்டிருப்பவர் உளுந்து தானியத்தால் ஆன வடை மாலைகளை அனுமனுக்குச் சார்த்தி வழிபட்டால், ராகு தோஷம் நிவர்த்தி ஆகி விடும் அதேபோல் வடந்தியாவில் அனுமனுக்கு ஜாங்கிரி மாலை சாத்துவார்கள் இதுவும் உளுந்தில் செய்ததுதான்.ஜாங்கிரி மாலை சாத்தினாலும் தவறுகிடையாது.

படித்ததில் பிடித்தது !

Monday, March 9, 2020

நாழிகை விநாழிகை அளவு கணித முறை.


நாழிகை விநாழிகை அளவு கணித முறை.

2 க்ஷணம் = 1 இல்லம்
2 இல்லம் = 1 காஷ்டை
2 காஷ்டை = 1 நிமிஷம்
2 நிமிஷம் = 1 துடி
2 துடி           = 1 துரிதம்
2 துரிதம்   = 1 தற்பரை
10தற்பரை = 1 பிராணன்
6பிராணன் = 1 விநாழிகை
60 விநாழிகை  = நாழிகை / கடிகை
1 நாழிகை = 360 பிராணன்
60 நாழிகை = 21600 பிராணன்
3 3/4 நாழிகை = 1 முகூர்தம்
30 நாழிகை = ஒரு பொழுது
60 நாழிகை = 1 நாள்
ஒரு நாள்  = 24 மணி
ஒரு நாழிகை = 24 நிமிடம்
2 1/2 நாழிகை = 1 மணி
1 முகூர்தம் = 1.30 மணி நேரம்

ஒரு நாளைக்கு சுமார் 21600 சுவாசங்கள் என்பதையே சிதம்பரத்தில் பொன்னம்பல கூரையின் அணிகளாக வெய்து இருக்கின்றனர்.

மனிதனின் ஆயுள் சக்கரம் 120 வருடங்கள் எனில் 21600 x 365.25 x 120..

Thursday, November 14, 2019

நேரமே உலகம் !





காலதேவி அம்மன் 

உங்களின் நேரத்தை பொற் காலமாக மாற்றிக் கொள்ள காலதேவியை வணங்குங்கள்.


12 ராசிகள்,
27 நட்சத்திரங்கள்,
9 நவ கிரஹங்கள் அமைந்துள்ள 'காலதேவி அம்மன்' சிலை.

ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால்,அதை நம்ப முடிகிறதா!அதுவும் நம்மூரில்.....

அக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி கிராமத்தில் உள்ளது. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்! கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம்

நேரமே உலகம்'’

புராணங்களில் வரும் கால ராத்திரியை தான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர். இவள் இயக்கத்தில் தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது.

காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.

சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.

இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்

பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.

கோயிலை தலா 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை காலச் சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது,  தாயே ! எனது நேரத்தை உன் வசம் ஒப்படைக்கிறேன். வரும் காலத்தை எனக்கு நல்லதாக  தந்தருள வேண்டுகிறேன் என வேண்டினால் போதும்.

செல்லும் வழி:

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, ஆட்டோக்களிலோ செல்லமுடியும்.

தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதை விட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.

இரவு நேரக் கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது.

Friday, November 1, 2019

காலங்களை ஆள்வதில் கோள்களின் விளையாட்டு






காலங்களை கிரங்கங்கள் எவ்வாறு ஆள்கிறது என்பதை காண்போம்

சூரியன்                    அயனம் 
சந்திரன்                   நிமிடம் 
செவ்வாய்               வாரம் 
புதன்                         ருது ( இரண்டு மாதங்கள் )
குரு                           மாதம் 
சுக்ரன்                       பட்சம் ( 15 நாட்கள் )
சனி                           வருடம் 

சூரிய வீதியை கிரகங்கள் கடக்கும் கால அளவுகளை நாம் அறிவோம் .

ஹோரை மற்றும் பிரசன்னத்தின் வழியே  ஒருவரின் பலனை துல்லியமாக அறிய  கிரகங்களின் ஆளுகைக்கு உட்பட்ட காலங்களை அறிவது அவசியம். மேற்கண்ட விதிகளின் வழியே பலன்கள் ஏற்படும் காலங்களை மிக துல்லியமாக அறிய முடியும் .

சப்த தாதுக்களும் கிரகங்களும்




சப்த தாதுக்களும் கிரகங்களும் 

உண்ணும் உணவு உடலில் ஏழு தாதுக்களாக பிரியும். இவையே உடலை வளர்க்கும் மற்றும் பாதுகாக்கும். அவற்றிற்கு உரிய காரக கிரகங்கள் இவை

சூரியன்                    எலும்பு 
சந்திரன்                  இரத்தம் 
செவ்வாய்              மச்ஜை 
புதன்                         தோல் 
குரு                            கொழுப்பு 
சுக்ரன்                      சுக்ல சுரோணிதம் 
சனி                            தசை

ஜாதகத்தில் சூரியன் பலமற்று காணப்பட்டால் எலும்பு தேய்மானம் உண்டாகும். சந்திரன் பலமற்று இருப்பின் இரத்தம் சம்பந்தமான பிரச்சனைகள் உண்டாகும்.

Wednesday, October 30, 2019

நைசர்க்கிக தசை


நைசர்க்கிக தசை 

ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படும்  சந்தோஷமான, துக்க கரமான நிகழ்ச்சிகள் எப்போது வரும் என்பதைக் கண்டுபிடிக்க பலவகையான கிரக தசைகளைச் சொல்லியிருக்கின்றார்கள். விம்சோத்திரி தசை, பிண்ட தசை, நைசர்க்கிக தசை, அம்ச தசை, காலச்சக்கர தசை, ஜைமினி சூத்திரத்தின் படியான சர ராசி தசை, ஸ்திர தசை, திரிகோண தசை என பல வகைகள் உள்ளன . அவற்றில் நைசர்க்கிக தசை என்ன என்பதை இங்கே காண்போம்.

வராகமிகிரரின் பிருஹஜ் ஜாதகத்தில் நைசர்க்கிக தசை கணிப்பது குறித்து ஒரு இலகுவான வழியும் கொடுத்திருக்கிறார். அதாவது  ஒருவனின் வாழ்க்கையில்

முதல் ஒரு வருடம் சந்திர தசையும்

பின் இரண்டு வருடங்கள் செவ்வாய் தசையும்

பின்னர் ஒன்பது வருடங்கள் புதன் தசையும்

அடுத்து இருபது வருடங்கள் சுக்கிர தசையும் நடக்கும். ( 13 -32 )

33 முதல் 50 வயது முடிய குரு தசையும்

51 முதல் 70 முடிய சூர்ய தசையும்

எழுபதுக்கு மேல் மரணம் வரைக்கும் சனி தசையும் நடக்கும்
என்று சொல்லியிருக்கிறார்.

இது நைசர்க்கிக தசை அதாவது இயற்கையான தசை என்று அழைக்கப்படுகிறது.

Monday, October 7, 2019

தீதுறு நட்சத்திரங்கள்.



தீதுறு நட்சத்திரங்கள் !

"ஆதிரை பரணி கார்த்திகை
ஆயிலிய முப்புரம் கேட்டை
தீதுறு விசாகஞ் சோதி
சித்திரை மகம் மீராரும்
மாதனங்கோண்டார் தாரார்
வழி நடைப்பாட்டார் மீளார்
பாய்தனில் படுத்தார் தேறார்
பாம்பின் வாய் தேரை தானே"

தனம் கடனாக கொண்ட பேர்கள் அதாவது பொருளை கடனாக பெற்றவர்கள் அதனை திருப்பி தர மாட்டார்கள் எனவும் பயம் மேற்கொண்டோர் திரும்ப மாட்டார்கள் எனவும் நோய் என பாய்தனில் படுத்தவர் தேரர் மாட்டார் எனவும் மேலும் இது பாம்பின் வாய் சிக்கிய தேரை மீள்வதை போன்றதாகும் என் இந்த பாடலின் வரிகள் அமைந்துள்ளது.உங்களின் அனுபவத்தை கொண்டு நிச்சயிக்கவும்.

சுப முகூர்த்தங்களுக்கு நிஷித்தம் ( தீதுறு ) என இந்த பன்னிரண்டு நட்சத்திரங்களை குறிப்பிடுகிறார்கள்.


1.ஆதிரை,( திருவாதிரை )
2.பரணி,
3.கிருத்திகை,
4.ஆயில்யம்,
5.பூரம்
6.பூராடம்
7.பூரட்டாதி
8.கேட்டை
9.விசாகம்
10.சித்திரை
11.மகம்

இதில் பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், பூராடம், பூரட்டாதி ஆகிய எட்டு நட்சத்திரங்கள், (அதோமுக நட்சத்திரங்கள், அதாவது, கீழ்நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

திருவாதிரை மேல்நோக்கு நட்சத்திரமாகும்

சித்திரை சுவாதி கேட்டை மூன்றும் சம நோக்கு நட்சத்திரங்கள் ஆகும்.

சுப நிகழ்விற்க்கு தவிர்க்க வேண்டிய மாதங்கள்.



விஷ மாதங்கள் - மல மாதங்கள்

எந்த மாதத்தில் பௌர்ணமியும் அமாவாசையும் ஏற்படவில்லையோ அந்த மாதம் விஷ மாதமாகும்.

எந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமியும் இரண்டு அமாவாசையும் ஏற்படுகிறதோ அந்த மாதம் மல மாதமாகும்.

விஷ மாதத்திலும் மலமாதத்திலும் சுப நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். 

ஆனால் சித்திரை , வைகாசி மாதங்கள் இதற்கு விதிவிலக்காகும். இந்த தோஷம் இந்த மாதங்களுக்கு இல்லை.


கசர யோகம்



எந்த ஒரு சுப நிகழ்வுகளுக்கும் கசர  யோகத்தை விலக்கிய சுபமுகூர்த்த காலத்தை நிச்சயிக்க வேண்டும். கரச யோகமுள்ள தினங்களை கண்டிப்பாக விலக்கியே ஆகவேண்டும்.

அப்படி செய்தால் திருமணத்தில் மணப்பெண்ணிற்கு ஆயுள் குறைவோ அமங்கலமோ ஏற்படும். உபநயனத்தில் பூணுல் இழத்தலும், சீமந்தத்தில் சிசு நாசமும் , யாத்திரையில் தப்பாத மரணத்தையும் தரும். இதற்கு எவ்வித பரிகாரமும் கிடையாது.எனவே கரச யோகத்தை நீக்கியே சுப நிகழ்வுகளை செய்ய வேண்டும்.

கசரம் பார்க்கும் விதம் 

முகூர்த்தம் வைக்கும் நாளில் சூரியன் நிற்கும் நட்சத்திலிருந்து சந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ணிவர அந்த தொகை ஒன்பதிற்கு மிகுந்து இருப்பின் ஒன்பதால் வகுக்க மீதம் உள்ள தொகை 3,4,5,9 ஆக கசர  யோகம் ஆகும்.

 1,2,6,7,8 ஆகியவை மிகுதியாக ஆக வந்தால் கசரமில்லை இது சுபமாகும்.

உதாரணம்
முகூர்த்த நாளன்று சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் உள்ளதாக கொள்வோம். சந்திரன் மகத்தில் இருந்தால் சூரியனினிலிருந்து எண்ண 10வது நட்சத்திரமாக வரும். இதை ஒன்பதால் வகுக்க மீதம் 1 கரசமில்லை. இது சுபமுகூர்த்தம் செய்ய ஏற்ற நாளாகும். மீதம் ஒன்பதிற்கு குறைவாக வரின் வரும் மிதத்தையே எண்ணியாக கொள்ள வேண்டும்.

~ குடும்ப ஜோதிடம் 

Wednesday, September 11, 2019

ஓணம் பண்டிகை ( மூன்றடி மண் )

ஓணம் பண்டிகை

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி மன்னர். தானம், தருமங்கள் செய்வதில் சிறந்து விளங்கிய இந்த மன்னன் ஒருமுறை வேள்வி செய்யும்போது திருமால் வாமனாக உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார்.



ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது?' என்றார்.

‘உலகையை அளக்கும் பரந்தாமனே. உங்களுக்கு என்னையே தருகிறேன். மூன்றாவது அடியை என் தலையில் வைத்து அளந்துகொள்ளுங்கள்' என்று சொல்லி சிரம் தாழ்த்தி நின்றார் மகாபலி. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனைப் பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.



கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கமாறு அருள் பாலித்தார் மகாவிஷ்ணு .  தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதாளத்திலிருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மன்னன். அதன்படி, ஒவ்வொரு திருவோணத் திருநாள் அன்று மகாபலி பாதாள உலகிலிருந்து பூலோகத்திற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள்

மக்களை காணவரும் மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் நாளை ஓணம் எனும் திருவோணத் திருநாளாகவும், புத்தாண்டாகவும் கொண்டாடுகின்றனர் இதனை நினைவு கூர்ந்து, மகாபலியை மீண்டும் வரவேற்கும் வகையில் இந்தத் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.


ஓணம் பண்டிகையின் சிறப்பம்சம், மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும்.



கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும் அதனால் இக்காலத்தில் வரும் ஓணத் திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஆண் பிள்ளைகள் அத்தப்பூ என்ற பூவைப் பறித்துக் கொண்டு வருவர். பூக்கோலத்தில் அதைத்தான் முதலில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்.

அதன் பின், தினமும் வெவ்வேறு பூக்களுடன் கோலத்தை அழகுபடுத்துவர். முதல் நாள் ஒரே வகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்றெனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். பத்தாம் நாள், பூக்கோலத்தின் அளவு பெரிதாக இருக்கும். தும்பை, காசி, அரிப்பூ, சங்குப்பூ போன்ற பூக்களுக்கு முதலிடம் தருவர்.

ஓணம் திருநாள் கொண்டாடப்படும் 10 நாட்களும் மக்கள் அதிகாலையிலே எழுந்து குளித்து வழிபாட்டில் ஈடுபடுவர். கசவு என்று சொல்லக்கூடிய சுத்தமான வெண்ணிற ஆடை உடுத்துவர். வீட்டுப் பெண்கள் வீட்டின் முன்பு 10 நாட்களும் தொடர்ந்து பூக்களினாலான கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்வர்.




நடைபெறும் திருவிழாவில், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனி பெயர் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள்.

ஓணம் பண்டிகையின்  முதல் நாள் அத்தம் ,

இரண்டாம் நாள் சித்திரா,

மூன்றாம் நாள் சுவாதி என்றும் அழைக்கப்படும். அன்று மக்கள் ஒருவருக்கொருவர் பரிசுகள் அளித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வர்.

நான்காம் நாளான விசாகத்தில், ஒன்பது சுவைகளில் உணவு தயார் செய்யப்படுகிறது. குறைந்த பட்சம் 64 வகையான உணவு வகை இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். இவ்வுணவினை ஓண சாத்யா என அழைப்பர்.

ஐந்தாம் நாள் அனுஷம் (அனிளம்) எனப்படும். அன்று, கேரளாவின் பாரம்பரியமான படகுப்போட்டி நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் பங்கு பெறுவோர் வஞ்சிப்பாட்டு என்ற பாடலைப் பாடிக்கொண்டு படகைச் செலுத்துவது இதன் சிறப்பம்சம்.

ஆறாம் நாள் திருக்கேட்டை(திரிக்கேட்டா) ,

ஏழாம் நாள் மூலம்.

எட்டாம் நாள் பூராடம்.

ஒன்பதாம் நாள் உத்திராடம் என்று அழைக்கப்படும்.

பத்தாம் நாள் திருவோணம் என்ற கொண்டாட்டத்துடன் ஓணத் திருவிழா முடிவடைகிறது.

 "ஓண சாத்யா"



 "கானம் விற்றாவது ஓணம் உண்" என்ற பழமொழி ஓண சாத்யா என்ற உணவின் சிறப்பைக் கூறுகிறது. ஆறு சுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சாத்யா" என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும்.


பெரும்பாலான உணவு வகைகளில் தேங்காய் மற்றும் தயிர் பெரும் பங்கு பெறுகிறது. இவ்வுணவு எளிதில் செரிமானம் ஆவதற்காக " இஞ்சிக்கறி", "இஞ்சிப்புளி" ஆகியவற்றை உணவுடன் எடுத்துக் கொள்வர்.

புலிக்களி





"புலிக்களி" அல்லது "கடுவக்களி" என்று அழைக்கப்படும் நடனம் ஓணத்திருவிழாவின் நாலாம் ஓணம் எனப்படும் நான்காம் நாளில் கொண்டாடப்படுகிறது. களி என்பது மலையாள மொழியில் நடனத்தைக் குறிக்கும். இந்நாளில் சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்சள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி வருவர். புலிக்களி நடனம் சுமார் 200 வருடங்களுக்கு முன் கொச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் ராம வர்ம சக்தன் தம்புரான் என்ற மன்னனால் ஓணம் விழாவில் தொடங்கி வைக்கப்பட்டதாகும். இசை ஒலிக்கேற்ப ஒரு வித தாளத்துடன் புலி வேடமிட்டு ஆடுவர்.



ஓணம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனம் "கைகொட்டுக்களி". கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி ஆடுவர். பெரும்பாலும் கைகொட்டுக்களி பாடல்கள் மன்னன் மகாபலியைக் குறித்தும் அவரை வரவேற்பதாகவும் அமையும்.

ஒணம் திருவிழாவில் தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழாவாகும். 10 ஆம் நாளான திருவோணத்தன்று, யானைகளுக்கு விலையுயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும் பூத்தோரணங்களாலும் அலங்கரித்து அணிவித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர். யானைகளுக்குச் சிறப்பு உணவுகளும் படைக்கப்படும்.



ஓணம் பண்டிகையை முன்னிட்டுகேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள்,பாரம்பரிய நடனப் போட்டிகளென 10 நாட்களும் பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.



தமிழ் இலக்கியத்தில் ஓணம் பண்டிகை

ஆவணி மாதம், திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம் பண்டிகையாகும்.   சங்ககால ஏடுகளில்  விஷ்ணுவின் பிறந்தநாளாகவும் 
வாமனர் அவதரித்ததும் அன்றுதான் எனவும் குறிப்புகள் உள்ளன. 
பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரிக்கிறார்.

“கணம் கொள் அவுணர் கடந்த பொலம் தார்
மாயோன் மேய ஓண நன் நாள்
கோணம் தின்ற வடு வாழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவின்
மாறாது உற்ற வடு படு நெற்றி
சுரும்பார் கண்ணி பெரும் புகல் மறவர்
கடு களிறு ஓட்டலின் காணூநர் இட்ட
நெடுகரை காழகம் நிலம் பரல் உறுப்ப
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர…"
 - மதுரைக் காஞ்சி (அடிகள் 590 முதல் 599 வரை)
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் பெரியாழ்வார் பரம்பரையாகத் திருமாளுக்கு தொண்டு செய்வதையும் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரமெடுத்து இரணியனை அழித்தவனை நம் துன்பங்கள் போகப் பல்லாண்டு வாழ்த்துவமே...

“எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன் ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின் றோம்திரு வோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல் லாயிரத் தாண்டென்று பாடுதமே”
 - பெரியாழ்வார் திருமொழி 
தேவாரத்தில் சம்பந்தர் ஓணம் கபலிசரத்‌தில் (மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்குகிறார்.

“மைப்பயந்த ஒண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஐப்பசி ஓண விழாவும் அருந்தவர்கள்
துய்ப்பனவும் காணாதே போதியோ பூம்பாவாய்”
 - திருஞானசம்பந்தர், தேவாரம் 503, திருமறை 2


இன்று அத்திருவிழா தென் தமிழகத்திலும் கோவில்களோடும் நின்றுவிட்டது. பாண்டியன் ஆட்சி செய்த கேரளத்தில் ஓணம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Saturday, September 7, 2019

அறுபதாம் கல்யாணம் என்கிற மணி விழா ~ சாந்தி சமஸ்காரங்கள்

அறுபதாம் கல்யாணம் என்கிற மணி விழா

சாந்தி சமஸ்காரங்கள் ( பரிகாரங்கள் )



இந்து மத சமஸ்காரங்களில் மனிதன் செய்ய வேண்டியதாக
60 வகை சடங்குகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல சடங்குகள்
அவனது குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும்
அவனது தந்தையால் செய்யப்பட்டு விடுகின்றன.

மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம், ஆதிஆத்மீகம்" என்கிற
இயற்கை, தெய்வ குற்றம், தன் செயலால் ஏற்பட்ட பாவ காரிய பலன்கள்
ஆகியவை வந்து தீயபலன்களைக் கொடுக்காமல் இருக்கவும்
அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்காக
அவனது 59, 60, 61 மற்றும் 70 வயது துவக்கம் ,
78 ஆம் ஆண்டு துவக்கம், 80 ஆம் ஆண்டு நிறைவு, 100 ஆம் ஆண்டு நிறைவு
ஆகிய காலகட்டங்களில் அதற்குரிய சாந்தி சடங்குகளை
செய்து கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

ஓரு ஆண்டு முடிவில் ஜன்ம நக்ஷத்ர நாளில் சாந்தி அப்த பூர்த்தி

55 வயது ஆரம்பத்தில் பீம சாந்தி

உக்ர ரத சாந்தி

மனிதனின் 59 ஆம் ஆண்டு கால புருஷனில் உக்ர ரதனின் ஆளுமைக்கு அம்சமான உக்ரனை அமைதிப்படுத்தும் நோக்குடன் செய்யப்படும் சாந்தி "உக்ர ரத சாந்தி" என்று சொல்லப்படுகிறது. இதைத்தான் "ஷஷ்டியப்த பூர்த்தி", "மணிவிழா" என்கிறார்கள்.

அறுபது வயதில் திருமணம் போன்று இந்த விழா நடத்தப்படுவதால் இந்த விழாவில் அந்தத் தம்பதியர்களின் பிள்ளைகள் அவர்களது குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இந்த "அறுபதாம் கல்யாணம்" என்கிற மணி விழா நிகழ்வு வயதான தம்பதியர்களுக்கு ஒரு மன நிறைவைத் தரும் விழாவாகவும் இருக்கிறது.



61 வயது ஆரம்பத்தில் சஷ்டியப்த பூர்த்தி

"ஷஷ்டியப்த பூர்த்தி" எனும் இந்த மணி விழாவில்  5, 9, 12, 13, 29, 33, 65, 125, 320 எனும் வரிசையில் தேவதைகளுக்கு கும்பங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்யப்படுகிறது. முக்கியமாக ம்ருத்யுஞ்ஜய கலசமும் வரிசையாக பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மார்க்கண்டேயன், திக்பாலகர்கள், சப்தசிரஞ்சீவிகள், ஆயுள் தேவதை, வருஷம், அயனம், நட்சத்திரம், கணபதி, நவக்கிரகம், அதிதேவதை, ப்ரத்யதி தேவதை எனும் 13 கலச பூஜை செய்வது சிறப்பானதாகும்.

இதில் சிவ தீட்சை எடுத்துக் கொண்டவர்களுக்கும், சிவபூஜை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் ருத்ரர்களுக்காக 11 அல்லது 1 கலசமும், பஞ்சப்ரும்ம கலசங்களாக 5 அல்லது 1-ம், ஆன்மார்த்த மூர்த்தி ஸ்தாபனமாக 10 கலசமும் ஆக 16 அல்லது 44 கலசங்கள் வைத்து வழிபாடுகள் நடத்தி அபிஷேகம் செய்வது மிகச் சிறப்பானதாகும்.

இந்த வழிபாட்டிற்குப் பின்பு தைல தானம், ஆஜ்யதானம், உதகபாத்ர தானம், வஸ்திர தானம், நவதானிய தானம், பூ தானம், கோ தானம், தில தானம், தீப தானம், ருத்ராட்சம் அல்லது மணி தானம், எனும் தச தானம் செய்து உமா மகேஷ்வர பூஜை எனும் வயோதிகத் தம்பதி பாத பூஜை செய்து திருநாண் பூட்டுதல் செய்து ஆரத்தி எடுத்து நிறைவு செய்தல் வேண்டும்.

இந்த மணிவிழா நிகழ்வுகள் தமிழ்நாட்டில் திருக்கடையூர் எனும் ஊரிலுள்ள சிவத்தலத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இங்கு செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள ஏதாவது ஒரு கோயிலில் செய்து கொள்கின்றனர்.



70 வயது ஆர்ம்பத்தில் பீமரத சாந்தி

72 வயது ஆர்ம்Uத்தில் ரத சாந்தி

77 வயது 7 மாதம் 7ம் நாள் ஆர்ம்Uத்தில் விஜயரத சாந்தி

மனிதனின் 78 ஆம் ஆண்டு துவக்கத்தின் போது விஜயன் எனும் ருத்ரனின் சாந்திக்காக அவரை அமைதிப்படுத்தும் பொருட்டு "விஜயரத சாந்தி" சடங்கு செய்யப்படுகிறது.

கொள்ளுபேரன் பிறந்த நாளில் செய்யப்படுவது கனகாபிஷேகம்

மனிதனின் 80 ஆம் ஆண்டு முடிந்து எட்டாவது மாதம் ஜன்ம நட்சத்திரத்தன்று "சகஸ்ர சந்திர தர்சன சாந்தி" செய்யப்படுகிறது.

85 வயது முதல் 90 வயது வரை . ம்ருத்யுஞ்ய சாந்தி

மனிதனின் வாழ்க்கையில் 100 ஆண்டு முடிந்து 101 ஆரம்பமாகும் போது செய்யப்படும் சாந்தி "சதாபிஷேக கனகாபிஷேகம்" என்று அழைக்கப்படுகிறது. இதுவே "அஷ்டோத்தர சதருத்ர கலசாபிஷேகம்" என்றும் சொல்லப்படுகிறது.

120 வயது சாந்தி.பௌஷ்டிகம்.

மேலே சொல்லப்பட்ட அனைத்தும் சாந்தி குசுமாசுரம் மற்றும் சாந்திரத்னாகரத்தில் உள்ளது.

ஜனனி ஜன்ம சௌக்யானாம் !

                  ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குலஸம்பதாம்
                  பதவி பூர்வ  புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா !




ஜாதகத்தில் லக்கினாதிபதி வலுத்திருந்தால் ஒருவரது ஜென்மம் சகல பாக்கியத்துடன் சீரும் சிறப்புமாக அமையும். ஈதலும் இசைப்பட வாழ்தலும் என்பதற்கு இணங்க வாழ்க்கை அமையும். தோன்றின் புகழோடு தோன்றுக என்பது வள்ளுவர் வான்மறை. ஒருவரது ஜாதகத்தில் லக்கினம் சூரியன் சந்திரன் மூன்றும் வலுத்திருந்தால் மேற்கண்ட நிலையில் வாழ்க்கை அமையும். உடல் உள்ளம் உயிர் மூன்றும் சிறப்புடன் செயலாற்றும்.

சுகாதிபதி அதிபதி வலுத்திருந்தால் தன்னுடைய குலம் சகல சம்பத்துடன் தழைத்து ஓங்கியிருக்கும். பேரன் கொள்ளுப்பேரன் வரை தன் வாழ்நாள் சகல வசதியுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். மனை வாகன தாயாதி வகைகள் அனைத்தும் சிறப்பாக அமையும்.

பூர்வபுண்ணியாதிபதி வலுத்திருந்தால் இம்மையில் அரசனுக்கு நிகராகவும் மறுமையில் தேவேந்திரப்பதவி, - சிவலோகப்பதவி - விஷ்ணுலோகப்பதவி ` சாலோக சாமிப சாரூப சாயுச்சிய பதவிகளை ஒருவன் பெறுவான்.
அவரவர் புண்ணியமே மக்கட் செல்வம் என்பது ஆன்றோர் வாக்கு. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் என்பதற்கிணங்க தொட்டதெல்லாம் பொன்னாகும். எண்ணங்கள் ஈடேற மனமகிழ்வுடன் வாழ்வர்.

Thursday, September 5, 2019

அபரான்னம்.

பிதிர்களுக்கு தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்.




பகல் பொழுதை  ஐந்து பாகமாக பிரித்து அதில்  நான்காம் பாகத்தில் உள்ள கால அளவே அபரான்னம் எனப்படும்  அபரான்னமே பிதிர்களுக்கு உகந்த காலமாகும். சிராத்த திதி இரண்டு நாட்களிலும் இருந்தால் அபரான்ன காலத்தில் திதி அதிகமாக உள்ள அன்றுதான் சிராத்த திதி கடைபிடிக்க வேண்டும்.

இந்த அபரான்ன காலத்தில்தான் பித்ருக்கள்  நாம் அளிக்கும் எள்ளும் தண்ணீரையும் உணவாக அருந்தி நம்மை ஆசீர்வதிக்க வருவார்கள். குதப காலத்திலும் தொடர்பு இருப்பின் இன்னும் விசேஷமாகும்  என்கிறது கதிவிலோசனம் எனும் பழமையான சாஸ்திர நூல்.

குதப காலம் என்பது பகல் பொழுதை பதினைந்து பாகமாக பிரித்து அதில் எட்டாவது பாகமே குதப்ப காலமாகும் . பகல் பொழுது  தோராயமாக 30 நாழிகை அல்லது 12 மணி நேரம் எனில் 12  / 15 = 48 நிமிடம் அல்லது இரண்டு நாழிகை அளவு ஆகும்.

காலை சூரிய உதயத்திலிருந்து கணக்கிட ஏழாவது பாகத்திலிருந்து குதப கால தொடக்கம்.48 x 7 = 336 நிமிடங்கள் 5 மணி 36 நிமிடங்கள் . காலை சூரிய உதயம் 6 மணி எனில் 6 + 5.36
= 11.36 மணி முதல் 12.24 மதியம் வரை குதப காலமாகும். சிராத்ததிற்கு இந்த குதப காலம் ஆன 11 மணி 36 நிமிடத்திலிருந்து 12 மணி 24 நிமிடம் வரை  கருப்பு எள்ளும் பெண் வயிற்று பிள்ளையும் சிறந்தது.
எவன் ஜோதிட சாஸ்திர இரகசியத்தை அறிவானோ அவன் அறம் பொருள் இன்பம் வீடு இவற்றையும் நற்கீர்த்தியையும் அடைவான்.
 ~ பாஸ்கர சித்தாந்தம்.
x

Monday, December 18, 2017

கோள்களின் அவஸ்தைகள்

கோள்களின் அவஸ்தைகள்.





கோள் இருக்கும் ராசியின் அடிப்படையில் உச்சம், ஆட்சி, நட்பு, பகை, சமம், நீச்சம் என பலவகைகளில் அதன் பலம் பற்றி கூறப்படுகிறது. இந்த அமைப்பின் படி சில சிறப்பு பெயர்கள் அளிக்கபட்டுள்ளது. அப்பெயர்களின் பொருள் வழியே அதன் குணத்தையும் காணலாம் மேலும்  அதன் சிறப்பு பலன்களையும் காண்போம்.

தீப்தன்:  தனது உச்சபாகையில்  மற்றும் மூல திரிகோணத்தில் இருக்கும் கோள்.

சுவஸ்தன்:  தனது சொந்த ராசியில் இருக்கும் கோள் .

முதிதன்தனது நட்பு  ராசியில் இருக்கும் கோள் .

சாந்தன்: நல்ல வர்க்கத்தில் உள்ள கோள்.

கக்தன்: பலமுள்ள வக்கிரமடைந்த கோள்.

தீபிடிதன்: போரில் தோல்வி அடைந்த கோள்.

பீதன்: முழு நீச்ச பாகையில் உள்ள கோள்.

விகலன்:  அஸ்தமனம் அடைத்த கோள். ( மூடம் )

கலன்பாவ வர்க்கத்தில் உள்ள கோள்.




தீப்த அவஸ்தை !

எதிரிகளை அழித்தல், பெருஞ்செல்வம், வலிமை பொருந்திய நிலத்திற்கு, மண்டலத்திற்கு சொந்தகாரர் ஆவார். 

சுவஸ்த அவஸ்தை !

பற்பல இரத்தினம், இன்பம், பொருள், இவைகளை உடையவர் படைத்தலைவன், குடும்ப முன்னேற்றம்.


முதித அவஸ்தை !

அழகிய பெண்கள், பொன் பொருள்கள், பற்பல இன்பங்கள் உடையவர், பகைவர்களை அழித்தல்.


Saturday, December 19, 2015

தீர்க்க ஆயுள்



ஆயுள் தீர்க்கம் !

இலக்கினதோன் அஷ்டமத்தோ னுடனேகூடி
இசைந்ததசமாதிபதி மூவர் சேர்ந்து 
பலமான கேந்திரதிரி கோணமுற்றால்
பாரிலவர்  தீர்க்காயுளாய் வாழ்வார்கள் 
நலமுடனே லக்கினேசன் அஷ்டமத்தோன்
நாடியே சரத்திலிருந்தால் தீர்காயுளாகும்
கலக்கமுடன் ஸ்திரஉபய ராசியாகில்
கழருவாய் மத்திப ஆயுளென்றே !                                   ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


இலக்கினாதிபதி, அஷ்டமஸ்தானாதிபதி, தசமஸ்தானதிபதி சேர்ந்து கேந்திர திரிகோணத்திலிருந்தால் ஜாதகன் தீர்க்காயுள் உள்ளவனாவான். அது போன்றே இலக்கினாதிபதியும் அஷ்டமாதிபதியும் சேர்ந்து சர ராசியில் நின்றால் தீர்க்காயுளுடன் இருப்பான். ஸ்திர மற்றும் உபயத்திலிருந்தால் மத்திம ஆயுளாகும்.

Thursday, December 17, 2015

நேத்திரம்



நேத்திர நோய் !

ஜன்மலக்கினம் மேஷமாய் ரவியிருந்தால்
ஜனித்தவன் நேத்திரரோகி யாயிருப்பான்
அன்புடனே கடகலக்கினம் ரவியிருந்தால்
ஆகுமப்பாநேத் திரபங்க மென்றேசொல்லு
இன்புடனேதுலா சிங்கந்தனிலே சூரியன்
இருந்தாலும் இரவில்கண் தெரிதப்பா
பன்னிரண்டு இரண்டில் ரவிபாபர் சேர்ந்தால்
பலநாளும் கண்நோயால் கலங்குவாறே!                  ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


ஜன்ம லக்னம் மேஷமாயிருந்து சூரியனிருந்தால் ஜாதகன் கண் நோய் உள்ளவராக இருப்பார்.கடக லக்கினமாகி சூரியனிருந்தால் நேத்திர பங்கமாகும். துலா லக்கினம் சிம்மலக்னமாய் இருந்து சூரியனிருந்தால் இரவில் கண் பார்வை தெரியாது . இரண்டு பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் பாப கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சதா காலமும் கண் நோய் இருக்கும்.

வாக்கு ஸ்தானமும் வித்தையும்




வாக்கு ஸ்தானமும் வித்தையும் !

இலக்கினத்திரண்டில் குருவிருந்தால் வேத சாஸ்திரங்கற்பான்.
                 இதமுடனே புதனிருந்தால் தமிழில் வல்லோனாம் 
தெலுங்கு கன்னடங்கற்பான் சனிசெவ்வாய் நிற்கில் 
                 தெளிவாக ராகுகேது இரண்டோனும் சேர்ந்தால் 
பலவிதமாயன்னிய பாஷை முதலாயுள்ள 
                 பலபாஷை நீஷபாஷை யெல்லாம் கற்று 
நலமுடனே சமர்த்தாய் விளங்கியிந்த 
                 ஞாலமதில் கீர்த்தியுடனிருப்பான் தானே !        ~ ஜம்பு மகரிஷி வாக்கியம் 


வாக்கு ஸ்தானத்தில் 

குரு இருக்க வேத சாஸ்திரங்களை கற்றுணர்வார்கள்.
புதன் இருக்க தமிழில் பாண்டித்தியம் பெற்று கீர்த்தி பெறுவார்கள்
சனியும் செவ்வாயும் நிற்க தெலுங்கு கன்னட பாஷை கற்றுணர்வார்கள்.
வாக்கு ஸ்தானாதிபதியும் ராகு கேது சேர்ந்திருந்தால் அந்நிய பாஷை நிஷா பாஷை முதலான பலவிதமான பாஷைகளையும் சாதகர் கற்றுணர்ந்து சிறப்பு பெறுவார்கள்.

Wednesday, December 16, 2015

ஜாதகன் விரும்பும் சுவைகள் !



ஜாதகன் விரும்பும் சுவைகள் !

இலக்கனத்தோன் குருவானால் தயிரிச் சிப்பான் !
              இசைந்த புதனானாலே புளிப் பிச்சிப்பான் !
நலமுடன் சுக்ரனானால் சர்க்கரை தேனிஷ்டம் !
         நவிலுவாய் சனிக்குக் கீரை விருப்பமாகும் !
நலத்தோனோடே ராகுகேது குளிகன் சேர்ந்தால்
               சத்திபூஜை செய்து மாங்கிஷம் புசிப்பார் !
நலமாய் வியாழனானால் ஊஷ்ண பஷண மென்றும்
      நவில்புதன் சந்திரன் குளிர்ந்த சோறுண்பாரே ! ~ ஜம்புமஹரிஷி வாக்கியம்.


இலக்கனாதிபதி குருவானால் தயிர் விருப்பம்.
புதனானால் புளிப்பு சுவையும்,
சுக்ரனானால் இனிப்பு சுவையும்,
சனியானால் கீரை வகைகளும்,
ராகுகேதுக்கள் லக்னத்தில் இருக்க உடன் குளிகன் சேர்ந்தால்
சத்திபூஜை செய்து மது மாமிச வகைகளை புசிப்பார்.

குரு லக்னாதிபதியானால் உடலுக்கு உஷ்ணம் தரும் ஆகாரங்களை உண்பார்.
புதனும் சந்திரனும் ஆனால் குளிர்ச்சி தரும் பதார்த்தங்களை உண்பர்.
சூரியனும் செவ்வாயும் லக்னாதியானால் அன்ன பதார்த்தங்களை சுடச்சுட உண்பர்.
Related Posts Plugin for WordPress, Blogger...